Monday, November 9, 2009

காதல் உணர்வு


நெஞ்சு நெருங்கிய போதெல்லாம்
நல்ல நட்பு பூப்பதைப்போல
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்

ஆனால்
காதல் இதயம் என்பது ஒற்றைக் காம்பு
அதில் ஒரு பூதான் பூக்கும்
அந்த ஒரு பூ காய்ந்து உதிர்ந்தால்தான்
இன்னொரு பூ பூக்கும்

காதலிக்கும் நூறுபேரும்
கைக்குள்ளேயே சிக்கிக்கொண்ட விரல்களைப்போல
நம்முடனேயே இருப்பார்கள் என்றில்லை

வண்ண வண்ண எழிற் கோலங்களில்
நம் உயிர் கரைந்து போனதை
அந்த வண்ணத்துப் பூச்சியிடமே
நாம் சொல்லாததைப்போல
அந்த நூறுபேரிடமும் நம் காதலைச்
சொல்லிவிட்டோம் என்றுமில்லை

வீசிச் செல்லும் வசந்தக் காற்று
சுகத்தையெல்லாம்
நம்மிடம் நிறைவாய்க் கொட்டிவிட்டு
நாம் யாரென்றும் அறியாததாய்
விலகிப்போவதைப்போல
அந்த நூறுபேரும்
நம்மைக் காதலித்தார்கள் என்றுமில்லை

ஆனால்
ஏதோ ஒரு நொடியில் எங்கோ ஒரு நினைவில்
அந்த நூறுபேரும்
நம் உயிரை உரசி ஊதுவத்தியாக்கி
வாசனைப் புகையாய்
நினைவும் நினைவுமல்லாததுமான
வினோதக் காற்றில்
கரையவைத்துச் சென்றிருப்பார்கள்

ஆமாம்
காதல் ஓர் அற்புத உணர்வு
அது இதயத்தின் முழுமொத்தத்துடன்
மல்லுக்குநின்ற உயிரின் பேரவஸ்தை

ஆயினும் ஓர் உண்மையை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
அந்த நூறு பூக்களில் ஏதோ ஒரு பூமட்டும்
உயிரில் நங்கூரம் செழுத்தி
நகராமல் கிடப்பதைத் தவிர்க்க
எவராலும் இயலுவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிருரசிய தொண்ணூற்றொன்பது பூவிலும்
தன் வாசனையின் ஓரத்தை
அப்பி வைத்திருப்பதை
உணராமல் இருக்க முடிவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிரை இரண்டாய்ப்பிளந்து ஒன்றை மட்டும்
நிரந்தரமாய்க் களவாடிக்கொண்டு
மற்றொன்றை ஜென்மத்திற்கும் தவிக்கவிடாமல்
இருப்பதில்லை

எப்படியோ...
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்தான்
ஏனெனில்
நட்பைத் தவிக்கலாம்
காதலைத் தவிர்க்க முடியாது

புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்
..........................................................................................
இது என் நண்பனின் படைப்பு
உங்களோடு பகிர்கிறேன்

7 comments:

  1. //ஆனால்
    ஏதோ ஒரு நொடியில் எங்கோ ஒரு நினைவில்
    அந்த நூறுபேரும்
    நம் உயிரை உரசி ஊதுவத்தியாக்கி
    வாசனைப் புகையாய்
    நினைவும் நினைவுமல்லாததுமான
    வினோதக் காற்றில்
    கரையவைத்துச் சென்றிருப்பார்கள்//

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  2. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete
  3. ஆண் பெண் நட்பை இதை விட சிறந்த கவிதையால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை கல்யாணி.இந்த கவிதைய படைத்தவர்க்கு என் நூறு நன்றிகளை சொல்லு.அதைவிட இந்த அற்புத படைப்பை பகிர்ந்தமைக்கு உன் தோழனின் ஆயிரம் நன்றிகள்.இன்னும் நிறைய நிறைய எழுது தோழி..

    ReplyDelete
  4. நீங்க சொன்னது போலவே செய்துட்டேன் !! நன்றிகள் கலையரசன்

    ReplyDelete
  5. ஆமாம் கதிர் படிச்சபோ ரொம்ப அருமையா இருந்தது !!!! உங்க நன்றிகளை சொல்லிட்டேன்

    ReplyDelete
  6. இது என் ஆசானின் கவிகள் அத்தனை வரிகளும் அருமை..

    ReplyDelete
  7. romba nalla erukku .nalla nalla kavithai

    ReplyDelete